Monday, March 16

அக்கினிப் பூக்கள்


               தேவனுடைய பிள்ளைகள் புகழ்ச்சிக்கு மயங்காதவர்களாக காணப்படவேண்டும். ஒரு காரியத்தை சிறப்பாக செய்து முடித்த பின்பு அனைவரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. அது தவறு அல்ல. ஆனால் நம்மை ஜனங்கள் புகழும் போது இனிமையாக உணரும் நாம், பிரியத்திற்க்குரியவர்களக நமக்கு நெருக்கமானவர்களை ஜனங்கள் புகழும் போது கசப்பாக உணருவோம் என்றால், அது மிகவும் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

      எப்போதும், எல்லாக் காலங்களிலேயும் நாம் முதன்மையானவர்களாக இருக்க முடியாது. நம் கண் முன்பு  நமக்கு அறிமுகமானவர்களை, கர்த்தர் அளவில்லாமல் உயர்த்துவார். அனைவரும் அவரை உயர்வாக பேசுவார்கள், புகழுவார்கள். கிறிஸ்துவின் அன்பு நமக்குள் இருக்குமென்றால் நாமும் அவர்களோடு சேர்ந்து களி கூறுவோம், பாராட்டுவோம். கர்த்தரும் நம்மில் பிரியப்படுவார்.

    ஏன் என்றால் அநேக நேரங்களில் நம்மை சோதிப்பதற்க்காகவே நம்மோடு இருப்பவர்களை ஆண்டவர் உயர்த்துகின்றார். அப்பொழுது நாம் எப்படி உணர்கிறோம் அது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா இல்லை, விசனமாக இருக்கிறதா என்று கவனிக்கின்றார்.

        இன்னொருவர் புகழப்படுவது, உயர்த்தப்படுவது நமக்கு கசப்பாக இருக்குமென்றால் அது நிச்சயம் பொறாமைக்கு நேராக கொண்டு போகும். அந்தப் பொறாமை அவர்களைக் குறித்து கேவலமாக பேச வைக்கும். அவர்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து விடக்கூடாது என்கிற வெறியை உண்டு பண்ணும். இதன் நிமித்தம் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட வைக்கும். இறுதியில் சாத்தான் உள்ளே புகுந்து தன்னுடைய கருவியாக மாற்றி அழிவிற்கு நேராக நடத்துவான்.

      சவுல் ராஜாவிற்க்கு ஜனங்கள் பாடிய பாட்டு் _'சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம்'_ மிகவும் விசனமாக இருந்தது. என்னைத்தானே ஜனங்கள் புகழ வேண்டும், எப்படி தாவீதைப் புகழலாம்... அதைத் தாங்க முடியவில்லை. அவன் காதுகளில் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. நாளுக்கு நாள் அந்தப் பாடல் அவனுக்குள்ளே பொறாமையும், கொலை வெறியையும் தூண்டியது. தன் வாழ் நாள் முழுவதையும் தாவீதைக் கொல்ல வேண்டும் என்கிற வீணான சிந்தனையில் அலைந்து அலைந்து அவனும் வீணனான். இறுதியில் ஆண்டவரால் கைவிடப்பட்டு மிகப்பயங்கரமான ஒரு முடிவைச் சந்தித்தான். அந்தப் பாடலைப் மாத்திரம் அவன் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பான் என்றாரல் பிசாசு அவனை இவ்வளவு வஞ்சித்திருக்கவே முடியாது.

    இப்படிப்பட்ட முடிவைத் தரக்கூடிய, பொல்லாத குணத்தை துளிரிலேயே கிள்ளி எறிவது எளியது. ஆனால், வளர விட்டு பின்பு விடுவது அல்லது வெட்டுவது அரியது. பாதிக்கப்பட்ட பின்பு விளைவுகளை எண்ணி சொல்லி சொல்லி அழுவது கொடியது.

 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும்_ யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
...சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.(எபிரேயர் 12:15-16)