Tuesday, March 17

அக்கினிப் பூக்கள்


     நாம் வாழ்கின்ற இந்த உலகில் ஒவ்வொருவரும், தான் விரும்புகிறதை நிறைவேற்ற பல வகைகளில் மிகவும் முயற்சிகள் பல செய்வர். அதற்காக எந்த விலைக் கிரயத்தையும் கொடுக்க, சற்றும் தயக்கம் காட்ட மாட்டார்கள். முழு கவனத்தோடும், முழு பலத்தோடும் ஈடுபாடு கொண்டு பசி, தாகம் மற்றும் ஓய்வையும் மறுத்து விரும்பியது நிறைவேறும் வரை மற்ற எதிலும் விருப்பம் இன்றி வாழ்வர்.

     இப்படி எல்லாம் பாடுபட்டு சேர்த்து வைத்த பணம், பட்டம், பதவி, ஆஸ்தி, அந்தஸ்து, வசதி, அழகு, அறிவு, திறமைகள் என பல்வேறு காரியங்களையே தன் மேன்மையாக அல்லது பெலமாக எண்ணி வாழ்வர். ஆனால், இவற்றையே தன் மேன்மையாக கருதுபவர்கள் பெறும் பரிசு என்னவென்றால், பெருமை, ஆணவம், அகம்பாவம், எவருக்கும் மற்றும் எதற்காகவும் அன்பு காட்டவும் , நல்ல பண்பினை வெளிப்படுத்தவும் மறுப்பர்.

      சில காலங்களில், சிறப்பு பரிசாக தேவனை எதிரியாக சம்பாதித்து, தனிமை, வெறுமை என பல்வேறு வகைகளில் இன்னல்களை அனுபவிப்பார்கள். நம்மை தேவன், புவியில் அறிந்து தெரிந்து கொண்டதின் நோக்கம் நமது நற்கிரியைகளின் மூலம் நமது வெளிச்சம் பிற மனிதர்கள் முன் பிரகாசிக்கவும், பிதாவின் நாமம் மகிமைப்படவுமே. கிறிஸ்துவாய் வாழ்ந்து, கிறிஸ்துவை வெளிப்படுத்தும் பொழுது தேவன் உன்னில் மகிமைப்படுவார். பரலோகில் உனது பங்கு நிறைவாயிருக்கும்.

  இப்படிப்பட்ட பொக்கிஷங்களைச் சம்பாதிக்க மிகவும் விரும்ப வேண்டும். 1/2 அடி வயிற்றுக்கு மேல் எதையும் சாப்பிட முடியாது. ஊரே சொந்தம் என்றாலும் 6 அடி படுக்கையில்தான் உறக்கம். கிலோ கணக்கில் நகை இருந்தாலும், அளவு அதிகமானால் அழகில்லை.

  வயது ஏற ஏற தியாகம் செய்து சேர்த்த அனைத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போகும். ஆனால், பரலோகில் சேர்த்து வைத்த ஒவ்வொன்றிற்கும் அர்த்தமும், ஆசிர்வாதமும் அதிகமாகும்.

  பரத்தின் மகிமையைக் கண்டவர், ஜகத்தின் மேன்மையை விரும்புவதில்லை.

 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.(கொலோசெயர் 3:1)

 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.(கொலோசெயர் 3:2)