Sunday, March 29

அக்கினிப் பூக்கள்

தேவ சித்தத்திற்குள் இருக்கும் உங்களை,
எந்த மனிதனின் சதித்திட்டங்களும்
மேற்கொள்ள இயலாது.
 நிலையில்லாத உலகில் நிரந்தரமான வாழ்வை நாடி, தேடி, ஓடிக்கொண்டிருக்கும் வேளைகளில் துரோகங்கள், ஏமாற்றங்கள் மற்றும் சதிச்செயல்களினால் தனிமை, வெறுமைகளை சந்திக்கும் நேரங்களில் வாழ்வைப் பாலைவனமாக உணருவீர்கள். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது


  என நடக்கும்  சூழ்நிலைகள் நம்மை ஏமாற்றும். வாழ்க்கை இவ்வளவு தானா? இதற்காகத்தான் பிறந்தேனா? என அநேக கேள்விகள் எழச் செய்யும். இதுவரை கரம் கொடுத்த பணம், பட்டம்,பதவி, அழகு,அறிவு, அந்தஸ்து, அனுபவம் என அனைத்தும் உதவாமல் போகும்.

   நான் இருக்கிறேன் என்ற உறவுகளும், நாடும்பொழுது நாதியற்றுப் போகும். நட்டாற்றில் கைவிடும். எல்லாம் உடைந்து போனாலும், உனக்காக உடைந்த ஒருவர் உதவிடும் படியான ஒத்தாசைகளை ஏற்கனவே, ஆயத்தம் செய்து முடித்திருப்பார்.

    நீங்கள் சந்திக்கும் காரியங்களை, சற்று சிந்தித்து பார்ப்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் எதுவும் தற்செயலாய் நடைபெற்றது கிடையாது. தேவ சித்தத்திற்குள் இருக்கும் உங்களை, எந்த மனிதனின் சதித்திட்டங்களும் மேற்கொள்ள இயலாது. நீங்கள் இடைவிடாமல் ஆராதிக்கும் உங்கள் தேவன், உங்கள் வாழ்வை குறித்தும்,
வழிகளைக் குறித்தும் உங்களைக் காட்டிலும் மிகவும் கவனமான, கண்ணோட்டத்துடன் உள்ளார்.

   தேவனுக்கு உண்மையாக உள்ள உங்களை நெருங்கும் முன்பு, அவரை மேற்கொள்ள வேண்டும். தேவனை ஜெயித்தவர் எவரும் இல்லை. அவர் தோற்றதாக சரீத்திரமும் இல்லை. கர்த்தர் அமைதியாக இருப்பதின் முடிவும், வேதத்திலுள்ள அனைத்து பிரச்சனைகளின் முடிவும் அற்புதமும், ஆசீர்வாதமுமே.
எஸ்தர், அன்னாள், ரூத், எஸ்றா, நெகேமியா என்பவர்களுடைய வாழ்வில் கர்த்தர் முகமுகமாய், பேசவிட்டாலும் அவர்களுடைய விசுவாசத்தால் அனைவரையும் ஜெயித்தார்கள். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்பதை, பொறுமையாகக் காத்திருந்து நிரூபித்தார்கள்.

   மாராவின் தண்ணீரை மதுரமாக்கும்படியாக, இஸ்ரவேலரின் பயணம் தொடங்கும் முன்னரே, இலட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்ப மரத்தை வளர்த்து, ஆயத்தப்படுத்தி இருந்தார்.

  யோனா கப்பலில் ஏறும் முன்னரே, புயலிலும் பெரிய மீனை ஆயத்தப்படுத்தி இருந்தார்.

  தாவீது, கோலியாத்தை ஜெயிக்கும் முன்னரே, சிங்கத்தையும் கரடியையும் ஜெயிக்க ஆயத்தப்படுத்தி இருந்தார்.

 தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் சங்கடங்களை சந்திக்கும் முன்னரே, தமது தூதனை அனுப்பி காக்கும்படியாக ஆயத்தப்படுத்தி இருந்தார்.

   இயேசு 5000 க்கும் மேற்பட்ட ஜனங்களை போஷிக்கும் முன்னரே, 5 அப்பங்களையும் 2 மீன்களையும் ஆயத்தப்படுத்தி இருந்தார்.

   தேவ பிள்ளையே, உன்னைக் காக்கும்படியான ஆயத்தங்களை செய்த பின்னரே, சில சங்கடங்களை தேவன் அனுமதிப்பார். சந்திக்கும் பிரச்சனைகளை உனக்கு அர்ச்சனைகளாக்கி, சோதனைகளை சாதனைகளாக்கி, அவமானங்களை வெகுமானங்களாக்கிட கர்த்தராகிய ஆண்டவர் உனக்குத் துணை உண்டு.

    நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41:10)

 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 54:17)