சில நேரங்களில் ஆண்டவர் நம்முடைய வாழ்வில் எது எல்லாம் நமக்குத் தேவை என்று நினைக்கின்றோமோ அவைகள் எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து பறித்து கொள்வார். இப்படி ஆகும், இவை எல்லாம், இவர்கள் எல்லாம் என்னை விட்டு போகவே மாட்டார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் ஒரு நொடிக்குள் எல்லாமும், எல்லாரும் உங்களை விட்டு வெகு தூரம் சென்றிருப்பார்கள். இந்த இழப்பை, ஏமாற்றத்தை உங்களால் தாங்கவே முடியாமல் இருக்கலாம்.
கண்களில் நதியைப் போல் கண்ணீர் வந்து கொண்டிருக்கலாம். ஏன், ஏன் என்று கேள்விக்குறிகள் உங்களுக்குள் எழுந்து கொண்டே இருக்கலாம். பதில் என்ன வென்றால் இந்த உலக வாழ்வில், விசுவாச வாழ்வில் நமக்கு மிக முக்கியமான தேவையான நபர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே என நாம் மறுபடியும் கண்டு பிடிப்பதற்க்காகவே.
உங்களைக் குறித்து உங்களுக்கு இருந்த, நீங்கள் போட்டிருந்த திட்டம் பொய்த்துப் போகாமல் இருந்திருக்கும் என்றால் தேவன் உங்களைக் குறித்து வைத்திருக்கும் திட்டம் என்ன என்பதை உங்களால் ஒரு போதும் கண்டு பிடித்திருக்கவே முடியாது. நீங்கள் இன்றைக்கு பிடிவாதமாக எனக்கு நான் விரும்பியதுதான் வேண்டும் என்று
தொடர்ந்து கொண்டிருக்கிற உங்கள் திட்டங்களையும், கனவுகளையும் கைவிடா விட்டால், தேவன் உங்களை எங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாரோ அங்கு உங்களால் போக முடியாது.
நினைத்தது நடக்காததால், தோற்றுப் போனபடியால் சோர்வோடு இருக்கிற நண்பரே! தேவன் உங்களை அழைக்கிறார். உங்களுக்காக நல்ல ஒரு திட்டத்தை அவர் வைத்திருக்கிறார். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுக்காக சிந்திப்பது எல்லாம் ஒரு தலைமுறைக்காகவே. ஆனால், தேவன் உங்களைக் குறித்து சிந்திப்பது பல ஆயிரம் தலைமுறைகளுக்காகவே. ஆபிரகாமுக்கான தேவனுடைய திட்டம் அவனை உயர்த்த மட்டும் அல்ல. அவன் மூலம் உலகையே திருத்தவும் கூட.
லோத் விட்டுப் பிரிந்தாலும், ஆகார் விட்டுச் சென்றாலும் அல்லது ஈசாக்கை இழக்க நேர்ந்தாலும் தேவ சித்தத்திற்கே விட்டுக் கொடுத்த ஆபிரகாம் வாழ்வு மலர்ந்ததே தவிர, தளர்ந்ததும் அல்ல. மறைந்ததும் அல்ல. அன்பு நண்பரே, உங்களுக்கான தேவ திட்டம் கால தாமதம் ஆகலாம். ஆனால், காலாவதி ஆகாது.
தேவ சித்தத்திற்க்கும், திட்டத்திற்கும் விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதுமில்லை.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசாயா 55:8)
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.(ஏசாயா 55:9)
நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும், நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.(ஏசாயா 14:24)
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.(1 பேதுரு 5:6)
