Friday, April 3

அக்கினிப் பூக்கள்


சந்தோஷம் & சமாதானத்தின்
ஆணி வேர்
          இந்த உலக வாழ்வில் யார் மீதாவது கசப்போ, காழ்ப்புணர்ச்சியோ நம்முடைய மனதில் வந்து விடாத படி தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை பிரயாணத்தில் அநேகர் நம்மை வேதனைப் படுத்துகின்றனர். நாம் நன்மை செய்தாலும் பதிலுக்கு ஜனங்கள், தீமை செய்யும் போது நம்முடைய உள்ளம் துடிக்கின்றது. மனதில் நீங்காத காயம் ஏற்படுகின்றது. ஐந்து, பத்து என்று எத்தனையோ வருடங்கள் உருண்டோடினாலும் அந்த சம்பவம் நம் மனதை விட்டு நீங்காது.

   அவர்களை பார்க்கும் போதெல்லாம் நம் மனது கசப்பினால் நிறையும். அவர்களுக்கு விரோதமான காழ்ப்புணர்ச்சி நம் மனதை ஆளுகை செய்யும். அவர்களுக்கு ஏதாவது தீங்கு நடக்காதோ என்று மனது ஆவலாய் எதிர் பார்க்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை குறித்து கேவலமான எண்ணங்களை பரப்பும் படியாக நாக்கு துடிக்கும்.

இது பொதுவாக, சாத்தானின் கையில் இருக்கும் வலிமையான ஆயுதம். நம்முடைய மனதில் உள்ள கசப்பும், காழ்ப்புணர்ச்சியும் மாறாத படிக்கு எதிரியாகிய சாத்தானானவன் எப்பொழுதும் மிகக் கவனமாயிருப்பான்.

  கசப்பு என்கிற இரும்பு விலங்கினால், உங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கும் வரைக்கும் ஒரு போதும் தேவன் தரும் ஆசீர்வாதங்களை நீங்கள் கைகளில் ஏந்த முடியாது. எனவே, தாங்கள் செய்யும் தீதான செய்கைகளால், துரோகத்தினால் உங்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியாத மனிதர்கள், உங்கள் உணர்வுகளை கட்டுப் படுத்த அனுமதி கொடுக்காதேயுங்கள்.

தேவனுடைய அனுமதி இல்லாமல் ஒரு முடி கூட கீழே விழாது. எந்த ஒரு எதிரியும் நம்மை தேவ அனுமதியில்லாமல் ஒன்றும் செய்து விட முடியாது. ஆயிரம் பேர் ஒன்று கூடி உங்களை அழிக்க நினைத்தாலும், கர்த்தர் அவர்கள் கையில் உங்களை ஒரு போதும் ஒப்புக் கொடுக்கவே மாட்டார். நம்முடைய வாழ்க்கை எப்போதும் முடியும் என்று நமக்குத் தெரியாது. அதற்க்குள்ளாக எல்லாக் கசப்பையும் தூக்கி எறிவோம். நாம் செய்த கணக்கில்லாத பாவங்களை தேவன் கிருபை, கிருபையாய் மன்னித்தார்.


   நாமும் மன்னிப் போமென்றால் தேவன் நம்மை அளவில்லாமல் ஆசிர்வதிப்பார். யார் மீது எந்த காழ்ப்புணர்ச்சியை வைத்தும், ஒரு பிரயோஜனமும் இல்லை. மாறாக நமக்கு அது வியாதியையும், மன வேதனையையும், தீங்கையும் மாத்திரமே விளைவிக்கும்.



   நண்பா, வேதம் கூறுகிறது பண்பா. ஏற்றுக்கொள் அன்பா. இது இல்லாமல் அது இல்ல.

   மன்னிக்காது மன்னிப்பு பெற முடியாது. (கொலோசெயர் 3:13)

  இரங்காது இரக்கம் பெற முடியாது. (மத்தேயு 5:7)


 ஆதலால், ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஐனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.(எபிரேயர் 12:15-16)