![]() |
|
நாம் தேவனோடு நெருங்கிய உறவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நமது உத்தமத்தின் அளவையும், நம்மை சூழ்ந்துள்ள போலி உறவுகளையும் கண்டு கொள்ளும்படியாய் கர்த்தர் ஒரு சில சூழ்நிலைகளைக் கடந்து செல்லும்படி அனுமதிப்பார். இதுவரைக்கும் கற்பனை கூட செய்யாத விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் எல்லா தகுதிகளும், எல்லாம் உடையவராக இருந்த போது ஆதரவை நாடி வந்தவர்கள் மற்றும் ஆதரவாய் இருந்தவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கதவுகளை அடைத்துக் கொள்வர். நன்மை பெற்றவர்கள் நன்றி மறந்து, அறிந்தவர்களும் அறியாதவர் போல நடக்கும் மற்றும் நடிக்கும் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் , பரியாச வார்த்தைகளையும் சொந்த கண்களாலேப் பார்க்க முடியும்.
ஆண்டவருக்குப் பிரியமாக வாழ, எந்த அளவுக்கு வாஞ்சிக்கிறீர்களோ அந்த அளவுக்கு சோதனைகளையும், வேதனைகளையும், தனிமைகளையும், கசப்புக்களையும் கடந்து செல்ல வேண்டி இருக்கும். முந்தைய காலத்தின் வசந்தங்களையும், பிந்தைய காலத்தின் வறட்சிகளையும் எண்ணி, எண்ணி மனம் ஏக்கம் கொள்ளும். மனிதர்கள் கொடுத்த வார்த்தைகள், வாக்குகள் எல்லாம் நினைக்கும் பொழுது கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் ஓடும். வாழ்க்கை கசப்பாகவும், மரணம் இனிப்பாகவும் தெரியும்.
ஆறுதலின் முடிவை நாடி, தேடி, ஓடும் தேவ பிள்ளையே... இப்பொழுது நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதனுடைய வார்த்தைகளை அல்ல. இவ்வுலகினில் உயிர் கொடுக்கும் உறவானாலும், தனக்கு ஆதாயம் இல்லாவிடில் ஒரு நாள் நிச்சயம் மாறும். மாறும் உலகில் மாறாத ஒன்று உண்டு. மாறுவது மனிதனுடைய நாக்கு என்றாலும் மாறாதது தேவனுடைய வாக்கு. நீங்கள் மனம் உடையும் போது எல்லாம் நாட வேண்டியது தேவனுடைய வேதமும், அவரின் பாதமுமே. நீங்கள் ஏமாற்றப்படாத ஒரே இடம் கிறிஸ்து இயேசுவின் சமூகமே. உலகம் உங்களை உடைக்கும் பொழுது எல்லாம், உங்களை மிக உயர்ந்த அதாவது மிகச் சிறந்த பாத்திரங்களாக உருவாக்குவது வேதமும், தேவ சமூகமுமே.
உத்தமமான தேவ பிள்ளைகளை மட்டுமே தேவன் பரீட்சிக்கிறார். தேவன் புடமிடுவது பொன்னையே, மண்ணை அல்ல. பரீட்சைக்குப் பின், நித்திய மகிழ்ச்சி உண்டாகும். முன்பு சொல்லாமல் சென்ற உறவுகள், பின்பு சொல்லி சொல்லி நாடி, தேடி, கூடி, ஓடி வந்து சேரும். மனிதன் கணக்குப் பார்த்து கொடுத்தால் குறைவு காணும். ஆனால், தேவன் கணக்குப் பார்த்துக் கொடுத்தால் நிறைவு மட்டமே காணும். ஆண்டவர் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை பரீட்சிக்கும் காலத்தில், நீங்கள் இழந்த எல்லாவற்றையும் கர்த்தர் கணக்குப் பார்த்து சரி செய்வார். அதுவரைக்கும் பொறுமையானது உங்களிடத்தில் பூரணமாய் யோபுவைப் போல இருக்க வேண்டும். வியாதியால் வந்த வேதனை, நண்பர்களால் வந்த போதனை, மனைவியால் வந்த சோதனை. இவை எல்லாவற்றையும் வென்று புரிந்தார் சாதனை.
தேவன், தம்முடைய பிள்ளைகளை மட்டுமே உபத்திரவத்தினால் உருவாக்குகிறார். உன்னை சூழ்ந்துள்ள வஞ்சக உறவுகளை இனம் கண்டு களை பிடுங்கும் நேரம் இது. துக்கம் உங்களைச் சூழும் நேரம், கவலை விடு. வேதம் எடு. முழங்கால் இடு. உலகையே வென்றவர் உனக்குள். உன்னைத் தள்ளாட விடுவதில்லை.
(எபிரெயர் 12: 5-13)
- அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
- கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
- நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
- எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
- அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
- அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
- எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
- ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
- முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
