Monday, April 6

அக்கினிப் பூக்கள்


சங்கடங்களை, சகாப்தங்களாக,
மாற்றுகிறவர் நம் தேவன்!!!

         
      வாழ்வில் மிகப் பெரிய இராட்சதர்கள் , தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பி கலங்கடிக்கும் படியாக பல காரியங்களைச் செய்வர்.யாருக்கும் வராத பிரச்சினைகள், வியாதிகள், மிரட்டல்கள், சமாதான குறைச்சல்கள் தேவனுடைய பிள்ளைகளைத் தேடி வரும். சிறிய பிரச்சனைகளை சந்திக்கவே மனிதர்கள் தடுமாறும் போது, மிகப் பெரிய பிரச்சினைகளும், எதிரிகளும் தேவனுடைய பிள்ளைகள் மீதும் மோதி அடிக்கும் போது, ஆரம்பத்தில் நிலைகுலைந்து போவது மிக சகஜமான காரியமே.

     எப்படியாவது,மனதில் பெரிய பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவிட வேண்டும்.பிழைக்கவே முடியாது, இனி வாழ்வில் ஒன்றுமே இல்லை, எல்லாம் முடிந்து விட்டது.இந்தப் பிரச்சினையை ஜெயிக்கவே முடியாது என்கிற எண்ணத்தை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும் என்று இரவும், பகலும் எதிரி போராடுவான்.பெரும்பாலான விசுவாசப் பிள்ளைகள், மனம் உடைந்து நம்பிக்கையை இழந்து சோர்ந்து போவார்கள். பிரச்சினைகளை மீறி தேவனையும், அவருடைய வல்லமையையும் விசுவாசிப்பது கடினமான காரியமாகத் தோன்றும்.

  ஆனாலும், மலை போல வருகின்ற பிரச்சனைகள் பனி போல மறைந்து விடும். ஒரு வினாடியில் பிரச்சினைகளை மாற்றிப் போடவும், சத்துருக்களை நீக்கி போடவும் கர்த்தருக்கு மிகப்பெரிய வல்லமை உண்டு. மிகப்பெரிய பிரச்சினைகளும், எதிரிகளும் தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் வருவதற்க்கு காரணமே தேவன், அதன் மூலமாய் மகிமை பட வேண்டும். அத்தோடு, தன்னுடைய பிள்ளைகளை அதன் மூலமாய் உயர்த்த வேண்டும் என்பதற்க்காகவே.

     எனவே, எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் கலங்க வேண்டாம். கோலியாத் என்னப்பட்ட, மிகப் பெரிய பெலிஸ்திய இராட்சதன் இஸ்ரவேல் தேசத்தை நாற்பது நாட்கள் கலங்கடித்தான். சவுல் ராஜாவும், அவன் வீரர்களும் மிகவும் பயந்து போனார்கள். ஒருவருக்கும் அவனை எதிர்க்க துணிவு இல்லை. அவனை ஜெயிக்கவே முடியாது என்று, எல்லோருக்கும் தோன்றிற்று.

     நம்பிக்கையை இழந்து விட்ட நேரத்தில், கர்த்தருடைய பிள்ளையாகிய தாவீது அங்கு வந்தான். உடனடியாக கோலியாத்தின் சவாலை ஏற்று களத்தில் குதித்து ஒரு விநாடியில் அந்த மிகப்பெரிய இராட்சதனை வீழ்த்தினான். இவனைக் கண்டா இவ்வளவு பயந்துப் போனோம் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

  கோலியாத்துகள் இஸ்ரவேலை ஜெயித்ததாக வேதம் சொல்லவே இல்லை. சிறிய தாவீது, தனக்கு முன் இருந்த பெரிய கோலியாத்தைப் பார்க்கமல், தன்னுடன் இருக்கும் கர்த்தரையே பார்த்ததால் கூறியது...

    கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும். யுத்தம் கர்த்தருடையது. அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.  (1 சாமுவேல் 17:47)

    இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?   (1 யோவான் 5:5)

  தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.   (1 யோவான் 5:4)