![]() |
எல்லாவற்றிக்கும் நேரம் ஒதுக்கி மிகக் கவனமாக செயல்பட்டு வந்தாலும் பல சமயங்களில் சில காரியங்கள் தாமதமாகத்தான் நடைபெறுகிறது. தாமதம் அதிகமாகும் பொழுது, தாமாகவே மன பதட்டம், அதினால் எரிச்சல்,அதினால் கசப்பு, அதினால் ஆத்திரம், அதினால் கோபம் , அதினால் வாக்குவாதம் ,அதினால் கருத்து வேறுபாடுகள் , அதினால் பிரிவினைகள் , அதினால் பகை இன்னும் பல உணர்வுகள் நெருங்கிய நண்பர்களாக மாறி விடுகின்றனர்.
இன்னும் பலர் மன நோவுகளினால் பல நோய்களை, அழைக்காத விருந்தாளியாக ஏற்றுக்கொள்கின்றனர். அன்புள்ள உள்ளத்தில் துன்பம் துயில் கொள்ளும். பண்புள்ள உள்ளத்தில் பாசம் நேசம் கொள்ளும். மிக அவசியமான காரியங்கள், மிக அவசரமாகும் வேளைகளில் ஆத்திரத்தில், பல ஆபத்துகளுக்கு அதாவது ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வார்த்தைகளால் உண்டாகும் சிறு விரிசல், வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவோ பெரும் அழிவு.
மனிதனால் ஏற்படுத்தப்படும் தாமதம் அழிவைத் தரும். ஆனால், தேவனால் ஏற்படுத்தப்படும் தாமதம் அழகையும் ஆசிர்வாதத்தையுமே தரும்.
வீட்டிற்கு இயேசு கிறிஸ்து வந்ததால் மார்த்தாளுக்கோ, அவரை நன்கு கவனித்துக்கொள்ளும் மிக அவசியமான காரியம், மிக அவசரமானது. விளைவு நல்ல பங்கு எது என்று காண இயலவில்லை. லாசரு வியாதி பட்டு இருந்த பொழுது, இயேசு கிறிஸ்து கூப்பிட்டும் வரவில்லை. மரிக்கும் வரைக்கும் தாமதப்படுத்துகின்றார். இன்னும் தெளிவாக சரீரம் அழுகும் வரைக்கும் தாமதப்படுத்துகின்றார்.
ஜெப ஆலயத் தலைவன் யவீரு மகள் மரிக்கும் வரைக்கும் தாமதப்படுத்துகின்றார். (மாற்கு 5:35)
இஸ்ரவேலின் இராணுவ வீரர்கள் இறந்து, உலர்ந்த எலும்புகளாகும் வரைக்கும் தாமதப்படுத்துகின்றார்.
இன்னும், வேதத்தில் கூறப்பட்டுள்ள அற்புதங்கள் ஒவ்வொன்றும் காத்திருந்து தான் பெற்றுக் கொண்டார். மனிதனுடைய பார்வையில் தாமதமாக வந்த பதில்கள், தேவனுடைய பார்வையில் மிகச் சரியான நேரத்தில் மிகத் தெளிவாக, மிகச் சிறப்பாக பயங்கரமான காரியங்களை செய்து முடித்தது.
ஆகையால், வேதத்தில் தேவன், தனக்காக காத்திருப்பவர்களைக் குறித்து இப்படியாகக் கூறுகின்றார்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:31)
... நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். (ஏசாயா 49:23)
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (1 பேதுரு 5:6)
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. (சங்கீதம் 27:14)
நண்பா வேதம் கூறுகிறது அன்பா. இதை ஏற்றுக்கொள் பண்பா.
